கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பி.ஏ.பி. பிரதான கால்வாய் அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டதால் 4 பம்பு செட்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாக பி.ஏ.பி. பாசன திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.
தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் பிரதான வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை சிலர் இரவு நேரத்தில் திருடுவதால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை என்று விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சமீரன் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மேற்பார்வையில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீசார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கண்காணிப்பு குழுவினர் பொள்ளாச்சி உட்கோட்டம் பகுதியில் தீவிர ஆய்வு நடத்தினர்.
அப்போது பி.ஏ.பி. பிரதான வாய்க்காலை ஒட்டி உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோலார்பட்டி கிராமத்தில் கண்ணன், நிர்மலா, ராமலிங்கம், ஆவலப்பம்பட்டியில் நடராஜன் ஆகியோர் விவசாய பம்புசெட்டுகளுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை எடுத்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.