முகநூல் மூலம் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி பொள்ளாச்சியில் உள்ள தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கடலங்குடியை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் தினகரன் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது.
அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 3 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியின் தாயும், பாட்டியும் சிறுமியை சந்திக்க மில்லுக்கு வந்தனர். சிறுமி அவர்களிடம் கடைக்கு செல்லவேண்டும் என்று கூறி தாயாரையும், பாட்டியும் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் வந்தனர்.
அப்போது அங்கு காத்திருந்த காதலன் தினகரன் சிறுமியின் தாயும்,பாட்டியும் அசந்த தருணத்தில் சிறுமியை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றார். திடீரென சிறுமி மாயமானதால் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தினகரன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது . இதையடுத்து போலீசார் மயிலாடுதுறை விரைந்து சென்று அங்கு இந்த சிறுமியை மீட்டு பொள்ளாச்சி அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் தினகரனை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.