கோவை;மலையாள மொழி பேசும் மக்களின் விஷு (மலையாள ஆண்டு பிறப்பு) பண்டிகையையொட்டி, சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பக்தர்களுக்கு நாணயம் வழங்கும் கைநீட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.கேரளாவில் மலையாள மொழிபேசும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விஷுவும் ஒன்று.
இது, மலையாள புத்தாண்டை குறிக்கிறது. கொல்லம் ஆண்டு, 1197ல் மேடமாதம், காலை, 4:00 மணிக்கு பிரம்மமுகூர்த்தத்தில் நேற்று பிறந்தது.விஷு பிறப்பை ஒட்டி, சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை, 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முக்கனிகள் படைக்கப்பட்டு, திருக்கனி தரிசனம் நடைபெற்றது.வெள்ளி மற்றும் நாணயங்கள் சுவாமிக்கு வைத்து பூஜிக்கப்பட்டது. ‘கைநீட்டம்’ என்றழைக்கப்படும் வைபவம் நடந்தது.
பூஜிக்கப்பட்ட நாணயங்களை பக்தர்களுக்கு நம்பூதிரிகள் வழங்கினர். சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது. விஷு சத்யா என்றழைக்கப்படும் அறுசுவையை வழங்கும், 23 உணவுகள் வழங்கப்பட்டன. ஐந்து வகை சாம்பார், 10 வகை பச்சடி, ஐந்து வகை பொரியல், இரண்டு வகை அப்பளம், ஒரு இனிப்பு பரிமாறப்பட்டன. 2,000க்கும் மேற்பட்டோர் உணவு அருந்தினர்.கோவில் கொடிமரம் முன், மூன்று வகை கனிவகைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திரளான பக்தர்கள், குடும்பம் சகிதமாக வந்து, சுவாமியை தரிசித்தனர்.
-சுரேந்தர்.