வேலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசைகளை உடைத்து அட்டகாசம் செய்த 10 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சிய குமாரவேல் பாண்டியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்லாத பிளஸ்2 ‘சி’ பிரிவு மாணவர்கள், தங்கள் வகுப்பறையில் உள்ள இரும்பாலான மேசை, நாற்காலி, பென்ச்களை உடைத்து நொறுக்கினர். இதையறிந்து அங்கு வந்த ஆசிரியர்கள், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். அதற்கு அந்த மாணவர்கள், ஆசிரியரை மிரட்டலாக பார்த்ததுடன் தாக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்தனர்.
காவலர்களை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில், மாவட்ட கல்வி அதிகாரி சம்பத் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து மேசையை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களையும் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சிய குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மாணவர்கள் மே 5ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்காக பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாணவர்களுக்கு, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
– பாரூக்.