தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சரைக் கண்டித்தும்,
தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இத்திட்டத்தினை அமல்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் லதா தலைமை வகித்தார். கல்வி மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் பால்துரை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம், இராகவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
சிறப்புரையாற்றிய மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுமார் 6 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரிகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம், அவர்களின் ஓய்வூதியத்திற்கென தமிழ்நாடு அரசு இதுவரை 52 ஆயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்துள்ள பணம் எங்கே உள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 52 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
மேலும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசினுடைய ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் எவ்வித உடன்பாடும் இதுவரை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் ஆணையத்திடம் செலுத்தவில்லை. அவ்வாறு செலுத்தாத நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கலும் ஏற்படப்போவதில்லை. இதனால் அரசிற்கு செலவினம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்க வேண்டும்.
மேலும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடியும், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போலவும் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மேலும், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தாமதித்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மூலம் அடுத்த கட்ட போராட்டம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாரப் பொருளாளர் ஞானவிநாயகன் நன்றி கூறினார்.
– பாரூக், சிவகங்கை.