சென்னை – ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் தொடர் சிகிச்சையில் உள்ளான் என ஓமந்தூரார் மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், ‘இணையதள சார்புநிலை மீட்பு மையம்’ 2021ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையத்தில் சென்னையை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். நன்றாக படித்து வந்த மாணவன், ஆன்லைன் வகுப்பின்போது வீட்டில் தனியாக இருந்ததுடன், பொழுதுபோக்காக இணையதளத்தில் விளையாட ஆரம்பித்துள்ளான்.
ஆன்லைன் விளையாட்டுகளை இரவு, 3 மணி வரை விழித்திருந்து நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடிதால், வீட்டில் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். இந் நிலையில் இணையதள மீட்பு மையத்தில் அவன் அனுமதிக்கப்பட்டபோது, உடல் மெலிந்து, பார்வை தொடர்பை தவிர்த்து, ஒற்றை எழுத்துகளில் பதிலளித்தான். அவனது அசாதாரண அசைவுகளின் வீடியோவை அவரிடம் காட்டியதும் அழ ஆரம்பித்தான். 4 நாளுக்கு ஒருமுறை அவனுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது, தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளான். இதேபோல், 67 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
-வேல்முருகன் சென்னை.