கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் தங்களை பணி நிரந்திரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வரும் , தங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் அதன் பின்பு பணி நிரந்தரம் செய்வதாக கூறி வேலை வழங்கிய நிலையில் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறிய 356 வது வாக்குறுதி( ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்) யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 2006ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடனே ஒப்பந்த முறையில் பணி செய்து வந்த செவிலியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்தது போலவே தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமலஷ்மி, கடந்த 7 வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழகம் முழுவதும் சுமார் 8000க்கும் மேற்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தாங்கள் பணி செய்ததாக தெரிவித்த அவர் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை முதல்வர் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதல்வரின் கவனத்திற்காக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாக தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.