கோவை வடக்கு மற்றும் படேல் நகர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான சரக்கு விரைவு ரெயில் சேவையைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கௌதம் ஸ்ரீநிவாஸ் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், கோவை ரயில் நிலையத்தின் நிலைய இயக்குநர் ராகேஷ் குமார் மீனா மற்றும் கோட்டப் பொறியாளர் (மேற்கு) கே.கே. சுப்பிரமணியம் முன்னிலையில் இச்சேவைத் துவங்கப்பட்டது.
இந்த சரக்கு விரைவு ரயிலை இயக்குவதற்கான ஒப்பந்தம் கன்னா லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 பார்சல் வேன்களை உள்ளடக்கிய, 353 டன் எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்லக்கூடியது இந்த ரெயில். கொரொனாவின் காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரெயில் இப்போது வேறு ஒப்பந்ததாரரிடம் அளிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு டெல்லியிலுள்ள படேல் நகர் ரயில் நிலையத்தைத் திங்கட்கிழமை இரவு 11.45 மணிக்குச் சென்றடையும். மீண்டும் தில்லியிலுள்ள படேல் நகர் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்குக் கோவை வடக்கு ரயில் நிலையத்தை வந்தடையும். வழியில் இந்த ரயில் வஞ்சிபாளையம், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா மற்றும் நாக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு நிறுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.