கோவையில் 300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் பத்ரா பன்னாட்டு நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பத்ரா என்ற பன்னாட்டு நிறுவனம் காப்பீட்டுத் துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கிவரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் தனது நிறுவனத்தை தொடங்கியது. தொடர்ந்து பெங்களூர், ராய்ப்பூர் உள்ளிட்ட இந்திய நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் புதிய அலுவலகம் கோவை நவ இந்தியா பகுதியில் இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் பத்ரா நிறுவன பொது மேலாளர் ரகுநாதன், துணைத் தலைவர் எலிசபெத் மெகார்மிக், நிர்வாக இயக்குனர் லட்சுமி, முதன்மை செயல் அதிகாரி ஜேசன் டேவிஸ், சர்வதேச சேவை வழங்குதலுக்கான இயக்குனர் வில் குக், தர இயக்குனர் இக்பால் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்தியாவில் எங்களது நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் எங்களது அலுவலகத்தைச் திறந்துள்ளோம். இந்த அலுவலகத்தில் 300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.என்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
பி.காம்., எம்.காம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். மாதந்தோறும் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
எங்களது நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது 48 சதவீதம் எங்கள் நிறுவனத்தில் பெண்கள் பணிபுரிகின்றனர். இது விரைவில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா காலத்திலேயே எங்களது நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
– சீனி,போத்தனூர்.