கோவையில் சிக்கன் ‘ஷவர்மா’ விற்பனை செய்த கடைகளில் நேற்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். கெட்டுப்போன கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த உணவை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் சிக்கன் ‘ஷவர்மா’ தின்பண்டம் சாப்பிட்ட கேரள சிறுமி, கடந்த வாரத்தில் பலியானார்.மேலும் பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வில், ஷவர்மா தயாரிப்பதற்கு கெட்டுப்போன கோழிக்கறி பயன்படுத்தியது தெரியவந்தது.இதன் தொடர்ச்சியாக கேரளாவிலும், பிற மாநிலங்களிலும், சிக்கன் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கோவை வ.உ.சி. பூங்காவை ஒட்டிய கடைகளில் மாலை வேளைகளில், சிக்கன் ஷவர்மா விற்பனை அமோகமாக நடக்கும். இந்த கடைகளில் நேற்று, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ‘டென்மார்க்’ மற்றும் ‘தி மெஜஸ்டிக்’ ஆகிய இரு கடைகளில் நடந்த ரெய்டில், கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவையும், பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இந்த கடைகளில் இருந்து சிக்கன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ‘உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எட்டு குழுவாக பிரிந்து, இந்த சோதனையில் ஈடுபட்டனர். உணவு பகுப்பாய்வு முடிவு அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷவர்மா உணவு தயாரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கோவை குடல் நோய் நிபுணர் மோகன் பிரசாத் கூறியதாவது:தொடர்ந்து ஷவர்மா சாப்பிடுவது மிக மோசமான வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும். ஷவர்மாவில் குபூஸ் எனப்படும் ரொட்டி தயாரிக்கும் மைதா பயன்படுத்துகின்றனர். மைதா மாவில் நார்ச்சத்து கிடையாது. மைதாவை வெள்ளை நிறமாக மாற்ற, அதிகளவில் ரசாயனம் உபயோகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து மைதா உட்கொண்டால், குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது.
குபூஸ் முழுமையாக சமைக்கப்படுவதில்லை. அரை விநாடி மட்டுமே நெருப்பு அனலில் வாட்டுகின்றனர். முழுமையாக வேகாத மைதா, உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.ஷவர்மாவில் சேர்க்கப்படும் மயோனீஸ் தயாரிக்க, சமைக்காத முட்டை, எண்ணெய் மற்றும் வினிகரை உபயோகிக்கின்றனர். சமைக்காத முட்டையில் அதிகளவில் பாக்டீரியா உள்ளது. முட்டையுடன் எண்ணெய் சேர்ப்பதால், அதிகளவில் கொழுப்பு உடலில் சேர்ந்து ஜீரண மண்டலத்தை பாதிக்கும். இரவு நேரத்தில் பச்சை முட்டை மற்றும் எண்ணெய் கலவையை சாப்பிடுவதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் நாள் மாமிசம்!சாலை ஓரங்களில் வண்டிகளில் வைத்து விற்பதால், வாகனங்களில் இருந்து வரும் தூசி, புகை அனைத்தும் ஷவர்மாவுக்கு உபயோகிக்கும் கோழிக்கறியில் படிந்து விடுகிறது. அதை தயாரிப்பவரின் கையில் இருக்கும் பாக்டீரியா, உணவு மூலம் நம் உடலுக்குள் எளிதாக சென்று விடும். சில கடைகளில் முதல் நாள் விற்காத எஞ்சிய ஷவர்மாவுக்கான கோழி மாமிசத்தை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் ‘சிக்கன் டிக்கா’ செய்து ஷவர்மாவுடன் விற்கின்றனர். இப்படியாக முதல் நாள் சமைத்த பிராய்லர் கோழிக்கறியை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அடுத்த நாள் மீண்டும் சமைத்தால், சில சமயங்களில் விஷமாக மாறி உயிரை குடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.