திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வு தொண்டு நிறுவனம் டீம் எவரெஸ்ட். 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 1,850 கல்லூரி மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்பிற்கான உதவிகள் செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடுத்த கட்டமாக இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி உதவி தொகை பெறும் மாணவ மாணவிகளுக்கான அறிமுக கூட்டம் கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு டீம் எவரெஸ்ட் நிறுவனர் கார்த்தி வித்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளிடம் அவர் பேசும்பொழுது எதற்காக இந்த டீம் எவரெஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டது .
இதன் மூலம் எவ்வளவு மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறித்து அவர் விளக்கமாக பேசினார். தொடர்ந்து கல்வி உதவித் தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அதற்கான கடிதம் வழங்கப்பட்டது மேலும் புத்தகங்கள் பைகள் ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ந்து டீம் எவரெஸ்ட் நிறுவனர் கார்த்தி வித்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் 1,850 பேருக்கு கலை அறிவியல் ,இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 1000 மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவிகள் தாய் அல்லது தந்தை யாராவது இல்லாதவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றார்.
எங்களது டீம் எவரஸ்ட் அமைப்பில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உலகம் முழுவதும் செயல்படுகிறார்கள் . மேலும் கல்வி உதவித் தொகை பெற்றுத் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் என்றார்.
– சீனி,போத்தனூர்.