தமிழ்நாட்டில், தற்போது கொப்பரை தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், தென்னை விவசாயிகளை நட்டம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நேரடியாக 2022ஆம் ஆண்டுக்கான தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை விற்பனைக் குழுவிற்கு உட்பட்ட திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சுமார் 400 மெ.டன் வீதம் தேங்காய் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவரை சுமார் 34.5 டன் தேங்காய் கொப்பரைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக சுமார் 37 லட்ச ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தேங்காய் கொப்பரைகளுக்கு, வெளி மார்க்கெட்டை விட வேளாண் விற்பனை குழுவில் கிலோ ஒன்றுக்கு சுமார் 30 ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ105.90 எனவும், பந்துக் கொப்பரைக்கு ரூ.110.00 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான தர நிர்ணயம் அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6%க்கு மிகாமல் இருக்க வேண்டும். வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிகபட்சம் 1% மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பந்துக் கொப்பரையின் ஈரப்பதம் அதிகப்பட்சம் 7% இருக்கலாம், சுற்றளவு குறைந்தபட்சம் 75 மி.மீ இருக்க வேண்டும். அயல் பொருட்கள் 0.2%, பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை ஆகியவை அதிகப்பட்சம் 2% மட்டுமே இருக்கலாம். சுருக்கம் கொண்ட கொப்பரை அதிகபட்சம் 10%, சில்லுகள் அதிக பட்சம் 1% இருக்கலாம். விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விபர நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரையினை ஒப்படைக்கலாம். அலுவலர்களால் தர ஆய்வு செய்து ,தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே, சிவகங்கை மாவட்ட தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காய் உற்பத்தி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையினை திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் வந்து, விற்றுப் பயனடையுமாறு தெரிவித்தார்.
இன்றைய விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டத்தில் சிவகங்கை வேளாண் விற்பனை குழு செயலாளர் சாந்தி, விற்பனைக் குழு மேலாளர் மாயாண்டி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ரத்னகாந்தி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மேலும், விவசாயிகள் இது குறித்த சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 8248259492, 9944929936 ஆகிய அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
– பாருக் சிவகங்கை.