சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்திபெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் 800 வருடங்கள் பழமையானதாகும்.
இந்தக் கோவிலில் எதிர்வரும் ஜூன் மாதம் வைகாசித் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நேற்று வழக்கம்போல் கோவிலை திறந்த அர்ச்சகர்கள் வழமையான கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். காலையில் பணிக்கு வந்த தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், கோவிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டுக்கொண்டு வந்தார். அப்பொழுது கோவில் கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த பிரதான உண்டியல், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு துணியைக் கொண்டு சுற்றி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து, அதைப் பிரித்துப் பார்த்திருக்கிறார். அந்த உண்டியலில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அது வெளியே தெரியாமல் இருக்க உண்டியல் கதவை அப்படியே மூடி வைத்து, துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. இதைக்கண்டு மேலும் அதிர்ந்த தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், உடனடியாக சிவகங்கை தேவஸ்தான தலைமை மேலாளருக்கும், சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளார். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் உடனே விரைந்து வந்து, கோவிலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர். இதில் உண்டியலை நோக்கி வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தனர்.
இதனை அடுத்து, தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், ஆய்வாளர் சுகன்யா, சிங்கம்புணரி பேரூராட்சி மன்றத்தலைவர் அம்பலமுத்து முன்னிலையில் நேற்று உண்டியலைத் திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணி தொடங்கியது. உண்டியலில் மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 886 ரூபாய் இருந்தது. கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் இந்தப் பணம் தப்பியது. சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள
அய்யப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. சில தினங்களுக்குப் பின்பு அருகிலுள்ள மற்றொரு கோவிலான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் வெண்கல வேல் ஒன்றும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிங்கம்புணரிக்கு அருகில் சில தினங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்ட குமரிபட்டி 18ஆம் படி கருப்பர் கோவிலை சேதப்படுத்த முயன்ற சில நபர்களை சம்பந்தப்பட்ட கிராமத்தினரே அடையாளம் காட்டி புகார் அளித்த நிலையிலும், அவர்களைப் பிடித்து விசாரணை செய்வதில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் அலட்சியம் காட்டுவதாக அந்தக் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
– பாரூக்,
சிவகங்கை மாவட்ட நிருபர்.