சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டையில் ஆண்டு தோறும் கலியுக மெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
இந்த நிகழ்வு முதல் முறையாக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு, அரசு அனுமதியுடன் நடத்தப்பட்டது. இதற்காக கிராமத்தின் நடுவே வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 7:30 மணிக்கு வழிபாடு செய்து, முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன.
காளைகளை அடக்க, உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 பிரிவுகளாக களமிறங்கினர்.
காளைகள் முட்டியதில் 69 பேர் காயமடைந்தனர். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், காயம்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி தலைமையில் வருவாய்த்துறையினரும், கால்நடைத்துறை அதிகாரிகளும் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர்.
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், டி.வி., சைக்கிள், பித்தளை அண்டா போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருங்காக்கோட்டை கிராம பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை செய்திருந்தனர்.
கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உதவிய அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோருக்கு கிராமத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
– பாரூக், சிவகங்கை.