அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்து ஆவணமாக்கும் பணியை கோவை மாநகர போலீசார் துவக்கியுள்ளனர். எதிர்கால போலீஸ் தலைமுறைக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
போலீசார் தங்கள் பணியில் அன்றாடம் வழக்குகள், போராட்டங்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் என பல்வேறு சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சம்பவங்களில், வழக்குகளாக மாறி கோர்ட்டுக்கு செல்பவை சொற்பமே. அவை வழக்கமான நடைமுறைப்படி ஆவணங்கள் ஆகி விடுகின்றன. ஆனால், பெரும்பாலான நிகழ்வுகள், எந்த விதமான ஆவணப்படுத்தலும் இல்லாமல், ‘எப்படியோ இன்றைய நாள் கழிந்தால் சரி’ என்ற ரீதியில் விடப்படுகின்றன.
இதனால் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, போக்குவரத்து சீரமைப்பு, வி.ஐ.பி., பாதுகாப்பு போன்றவற்றில் இன்றைய போலீசார் சந்திக்கும் பல்வேறு நிகழ்வுகள், அவை சார்ந்த நிறை குறையான அனுபவங்கள் எதுவும், எதிர்காலத்தில் இந்த பணிக்கு வரப்போகும் தலைமுறைக்கு தெரியாமல் போகும் வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், தாங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை கட்டாயம் ஆவணப்படுத்தியாக வேண்டும் என்று போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி இந்தாண்டு ஜன., முதல் ஏப்., வரையிலான நான்கு மாதங்களில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி, வரும் வாரத்தில் தொடங்கப்படுகிறது.
இந்த ஆய்வில் கலந்து கொள்ளும் அதிகாரிகள், தாங்கள் சந்தித்த சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், அவற்றுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், சாதக பாதகங்கள், குற்றவாளிகளை கண்டறிவதில் ஏற்பட்ட இடையூறுகள், அதை எதிர்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க கையாண்ட வழிமுறைகள் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த தகவல்கள் அனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தப்படும். இவற்றை படிக்கும் எதிர்கால தலைமுறை போலீஸ் அதிகாரிகள், கடந்த கால நிகழ்வுகளை எளிதில் புரிந்து கொள்வர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த ஆவணம் பேருதவியாக இருக்கும். இந்த ஆவணப்படுத்தும் பணி, இனி ஒவ்வொரு வாரமும் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.