சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவருக்கு புனிதா என்கிற மனைவியும் அபிராமி, சரண்யா என்ற இரு மகள்களும் சபரீஸ்வரன் என்ற மகனுடன் 3 பிள்ளைகள்.
நேற்று சபரீஸ்வரன் தனது சகோதரிகளுடன் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது சபரீஸ்வரனை கட்டுவீரியன் பாம்பு கடித்ததால் சம்பவ இடத்திலேயே சபரீஸ்வரன் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த சகோதரிகள் கூச்சலிட்டனர். அருகில் இருந்த பெற்றோர்கள் சபரீஸ்வரனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் இருக்கும் மாவட்ட அரசு
மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சபரீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக பெற்றோரிடம் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகனை இழந்த சோகத்தில் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து கெங்கவல்லி காவல்துறையினர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு அங்கிருக்கும் பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் சபரீஸ்வரன் பாம்பு கடித்து இறந்த செய்தி ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாலசுப்பிரமணிம், ஆத்தூர்.