இந்துத்துவா கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணியும், கோவையில் நீலச்சட்டைப் பேரணியும் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன. இவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, பாசிசத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் நேற்று மாலை செஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கத்தினர் மற்றும் அம்பேத்கரிஸ்டுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கிய செஞ்சட்டைப் பேரணியை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாலை 4 மணி அளவில் காளவாசல் பகுதியில் தொடங்கிய பேரணி, 6 மணி அளவில் பழைய நடராசா திரையரங்கம் பகுதியில் முடிவடைந்தது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பின்னர் அங்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்., மே 17 இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், த.மு.மு.க., எஸ்டிபிஐ ஆகியவை உள்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சொந்தச் செலவில் வாகனங்களை அமர்த்தி, இந்தப் பேரணிக்கு வந்திருந்தனர்.
பேரணி தொடங்கியபோதே மழை இலேசாகத் தூறத் தயாராக இருந்தது. ஆனாலும் பேரணி திட்டமிட்டபடி தொடங்கியது. தூறல் விழ ஆரம்பித்தும் பேரணி கலையாமல் தொடர்ந்து சென்றது.
சிலம்பம், பறையாட்டம் என பேரணிக்கு முன்னரும் ஆங்காங்கே நின்றும் செஞ்சட்டைத் தோழர்கள் கோலாகலத்துடன் முழக்கமிட்டது, அந்தந்த வட்டாரங்களில் மக்களை நின்று பார்க்கவைத்தது.
நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மதுரை எம்பி வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் ம.ம.க.வின் அப்துல் சமது, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, மா.பெ.பொ.க. தலைமைக்குழு வாலாசா வல்லவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தியாகு, தமிழக மக்கள் முன்னணி அமைப்பாளர் பொழிலன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடத் தமிழர் கட்சியின் கதிரவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்,
அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன், புரட்சிகர மாணவர் முன்னணி அன்பரசு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் பார்த்திபன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி திபேன் ஆகியோர் உள்பட பலரும் பேசினர்.
– மதுரை வெண்புலி.