தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுவித்து தீர்ப்பு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பேரறிவாளன்.. 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவு- 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பு முதல் இன்று வரை நடந்தது என்ன?
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதியானது. ஏற்கனவே நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது. ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன்,ஜெயக்குமார் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் தங்களது கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி நீண்டகாலம் முடிவெடுக்கவில்லை என பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் ஆயுள் தண்டனை பெறும் இந்த மூவர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இதனையடுத்து 2014 பிப்ரவரி 19-ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை மத்திய அரசுக்கும் முறைப்படுத்தி தமிழக அரசு தெரிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போய் மத்திய அரசு தடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் விவகாரம் மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்கிற பிரச்சனை எழுந்தது.
2015-ம் ஆண்டு டிசமப்ர் 2-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான் பெஞ்ச், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு என்பது மாநில அரசுக்கான சிறப்பு அதிகாரம் தரக் கூடியது. ஆகையால் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசு 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை என தீர்ப்பு தந்தது. பின்னர் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்சுக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு 7 தமிழரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி கோகாய் பெஞ்ச் தீர்ப்பளித்தது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானம் மீதுதான் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் பேரறிவாளன் தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழக அரசின் 2018-ம் ஆண்டு தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் ஜனாதிபதி முடிவுக்கு அனுப்பியது ஏன்? என காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உண்டு எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் மத்திய அரசோ, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரை விடுதலை செய்வது மத்திய அரசின் கைகளில்தான் என திரும்ப திரும்ப வாதிட்டது. இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தமிழக அரசும் ஏற்கனவே 9 மாதங்களுக்கும் மேலாக பரோல் வழங்கியது. இந்த நிலையில் இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
-Ln இந்திராதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.
supreme court