கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சாலையோரங்களில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடங்களில் இருந்து கோழிக்கழிவு மற்றும் மருத்துவக்கழிவு, ரசாயன கழிவு உள்ளிட்டவைகளை கொட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தெரிவித்த புகார் மற்றும் போராட்டத்தை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் கேரள பகுதியிலிருந்தும் கழிவுகள் கொட்டப்படுகிறதா? என்று அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது பாலக்காடு ரோடு, ஜமீன் ஊத்துக்குளி ரோடு, உடுமலை ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் ஆங்காங்கே கோழிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்கள் கொட்டப்படும் செயல் அரங்கேறி வருகிறது.
மேலும் நெடுஞ்சாலையிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலையோரமும் இரவு நேரத்தில் மர்மநபர்கள் கழிவுகளை கொட்டி செல்லும் செயலில் ஈடுபடுகின்றனர்.
இதில் அதிகபட்சமாக சூளேஸ்வரன்பட்டியில் இருந்து மோதிராபுரம் செல்லும் சாரையோரம் அதிகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் கழிவுகளை கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.
வாகனபோக்குவரத்து மிகுந்த சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் சில நேரங்களில், கால்நடைகள் கோழிக்கழிவுகளை நுகர்ந்து செல்வதுடன் அதனை ஆங்காங்கே சிதறி போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள பல இடங்களில் கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றும், அதனை கொட்டி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.