அரசுப் பணியில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எந்த ஒரு மதத்துக்கும் ஆதரவாக இல்லாமல், நடுநிலையாகச் செயல்படவேண்டும் என்பது விதி. இதனை மீறி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, மதம் சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ செயல்படும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கலில் அவ்வாறு ஒரு சார்பாக செயல்பட்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக வரும் செய்திகளைச் சேகரித்து, அதனை தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சுரேஷின் முகநூல் பக்கத்தை ஆய்வுசெய்து பார்த்த போது, தொடர்ந்து அவர் ஒரு சார்பாக பதிவு செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷ் குமாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது முகநூல் பக்கத்தை பின்பற்றி வந்தவர்களில் ஏழு பேரை ரூரல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
– பாரூக், சிவகங்கை.