சமையலுக்கு பயன் படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரில் தொடங்கி வங்கி சேவைகள் வரையிலான அனைத்து வகையான பணம் தொடர்பான பல்வேறு விஷயங்களும் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் (நாளை மறுநாள்) மாற இருக்கிறது.
ஒவ்வொரு மாதத் தொடக்கத்தின் முதல் தேதியிலும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஜூன் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஜூன் 1-ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களில் சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது வருகிற மாதமும் விலை அதிகரிக்கும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தங்க நகைகளுக்கான புதிய விதிமுறையும் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து நகைகளிலும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரையுடன்தான் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1 முதல் கொண்டு வரப்படும் தங்க நகைகளுக்கான புதிய விதிமுறை திட்டத்தின் மூலம் 14, 18 மற்றும் 22 ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் இனி விற்பனை செய்யப்படுகிறது.
மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதிகளை போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் ஜூன் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. 150சிசி மேலுள்ள இருசக்கர வாகன உபயோகிப்பாளர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதமாக உயர்கிறது. அதேபோல 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்களுக்கு 6 சதவீத பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தை அந்த வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டியும் விகிதம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் வைத்து இருக்கும் குறைந்த பட்ச இருப்பு தொகையானது வருகிற ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் செமி அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் குறைந்தபட்ச இருப்பு தொகையான 15,000ல் இருந்து 25,000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இருப்பு, வீட்டுக் கடன் வட்டி, மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம், ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 ஆகிய மூன்று கிரேடுகளில் தங்க நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இது குறித்து முன்கூட்டி வாடிக்கையாளர்கள் தயாராக வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் ஆலோனை ஆகும்.
– Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.