சென்னை: தொடர் மின்வெட்டை கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகம் அருகே உள்ள அண்ணா சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் மின் தடை அதிகளவில் காணப்பட்டது. பல மாவட்டங்களில் ஏற்பட்ட பல மணி நேரம் ஏற்பட்ட மின் தடை காரணமாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மின் தடையால் இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்தன. சமூக வலைதளங்களிலும் பலர் அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டதால் இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசிடம் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டதாகவும், 12 மாநிலங்களில் மின் தடை அபாயம் இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. ராகுல் காந்தி தொடங்கி பல தேசிய தலைவர்களும், பிற மாநில அரசியல் கட்சி பிரமுகர்களும் மின்வெட்டு பிரச்சனையை எழுப்பி மத்திய அரசை விமர்சித்தனர்.
இந்த நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த மே 1 ஆம் தேதி 1.44 லட்சம் யூனிட்டுகளையும், 8ஆம் தேதி அன்று 4.5 லட்சம் யூனிட்டுகளையும் யூனிட் ஒன்று ரூ 12 என கணக்கிட்டு வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.” என விளக்கமளித்தார்.
அமைச்சர் இவ்வாறு வாக்குறுதி அளித்தாலும், தமிழகம் எங்கும் மின்வெட்டு குறித்த புகார்கள் ஓயவில்லை. பல்வேறு காரணங்களை சொல்லி மின் தடை செய்யப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுவதை காண முடிகிறது. இந்த நிலையில், சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணா சாலையில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் இரவு திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எப்போதும் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் அண்ணா மேம்பாலத்துக்கு கீழ் அமர்ந்து இவர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.