கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, மகாராஷ்டிராவிலிருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், ஒருகிலோ ரூ.14ஆக குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு தினமும் டன் கணக்கில் கொண்டுவரப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் வெளியிடங்களுக்கு சில்லரை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயம் களில் பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதி மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயம் வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை குறைவாக இருந்தது. இதனால், அந்நேரத்தில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60வரை என கூடுதல் விலைக்கு விற்பனையானது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரிய வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. இதில் கடந்த ஒரு வாரமாக, கர்நாடக மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து, பெரிய வெங்காயம் வரத்து மேலும் அதிகரிப்பால், நேற்றைய நிலவரப்படி மார்க்கெட்டில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.14 முதல் அதிகபட்சமாக ரூ.16க்கு என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்க்கெட்டுக்கு கொண்டுவரும் பெரிய வெங்காயத்தை, தொழிலாளர்கள் தரம்பிரித்து, கேரள மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர், என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.