மதுரை களிமங்கலத்தை சேர்ந்தவர் பிரேம்தீன் நைனார். உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் நியாஸ் லுக்மான்(22) மற்றும் இஜாஸ் அகமது(14).
லுக்மான் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், இஜாஸ் அகமது 9ஆம் வகுப்பிலும் படித்து வந்தனர்.
இருவரும் கருங்காலக்குடியில் உள்ள தங்களது உறவினரான ரஹ்மத்துல்லா என்பவரின் வீட்டிற்கு வந்துவிட்டு, நேற்று களிமங்கலத்திற்குச் செல்வதற்காக தங்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.
வஞ்சி நகரம் கிராமத்தை அவர்களது இருசக்கர வாகனம் கடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்த அவர்கள் இருவரின் மீதும் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் லுக்மான் மற்றும் இஜாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய கொட்டாம்பட்டி காவல்துறையினர், மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் பத்மநாபன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
– மதுரை வெண்புலி.