இல்லந்தோறும் இன்புற வேண்டியும், தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க கோவை மாவட்டம் ஆனைமலையில் AVR நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்து மரங்களின் திருமணத்துக்கு திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது.
அதில் மணமகன் அரசமரம் என்றும், மணமகள் வேம்பு மரம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அழைப்பிதழை அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழாக்குழுவினர் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் விநியோகம் செய்தனர்.
இதனையடுத்து திருமணநாளான ஜூன் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று காலையில் உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும் வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு நடந்தது. மேலும் இரண்டு மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
பின்பு கோவில் பூசாரி தமிழ்ச்செல்வன் தீபாராதனையை தொடர்ந்து காசி விஸ்வநாத குருக்கள் மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க கிராம மக்கள் புடைசூழ அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது. பின்னர் வினோத திருமணத்துக்கு விருந்தாளிகளாக வந்திருந்த அனைத்து மக்களுக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.