உத்தரபிரதேச அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டம் –
காவல்துறையினருக்கும் தமுமுக வினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு….
நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகி நுகர்சர்மா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது மிகவும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பாஜக அரசை கண்டித்தும் நுகர்சர்மா வை கண்டித்தும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்திய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல் கைது நடவடிக்கைகள் நடைபெற்றது. சில இடங்களில் புல்டோசர்கள் வைத்து இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக பல்வேறு வீடியோக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்திற்கு கண்டன முழக்கங்களை எழுப்பியபடி வந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை ரயில் நிலைய நுழைவாயில் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு காவல்துறையினருக்கும் தமுமுக வினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்தே பின்னால் வந்த தமுமுக வின் மற்றொரு குழுவினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால் இரயில் நிலையத்திற்கு உள்ளும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-சீனி,போத்தனூர்.