கோவை, ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மற்றும் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பு பகுதிகளில் கட்டப்படும் இரு மேம்பால பணிகளை, தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார். கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில் துவங்கி, எல்.எம்.டபிள்யு., சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு, வண்ணான் கோவில் சந்திப்பில் முடியும் வகையில், 1,882 மீட்டர் நீளத்துக்கு, 88.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி, 2020, நவ., 24ல் துவக்கப்பட்டது.
துாண்கள் கட்டப்பட்டு, ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; இதுவரை, 5 கண்களில் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை, 2023, பிப்., 25க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதே வழித்தடத்தில், ஜான்போஸ்கோ சர்ச்சில் இருந்து ஜி.என்., மில்ஸ் சந்திப்பு, வெள்ளக்கிணறு பிரிவு வரை, 658 மீட்டர் நீளத்துக்கு, ரூ.30.39 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.14 கண்களில், 11ல் ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று கண்களில் மட்டுமே ஓடுதளம் அமைத்து, மற்ற வேலைகள் செய்ய வேண்டும். இவற்றை, ஆக., 4க்குள் முடிக்க காலக்கெடு கொடுக்கப்படுகிறது. இவ்விரு பாலங்கள் வேலையும் மிகவும் மந்தமாக நடந்து வந்ததால், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் – – கல்லார் இடையே, 2.4 கி.மீ., துாரத்துக்கு ரூ.200 கோட மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இப்பாலம் வேலையை துவக்குவது தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனுடன் ஆலோசித்தார்.தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையில் நான்கு இடங்களில் துவக்கப்பட்ட மேம்பால வேலைகளில் இரண்டில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்பட உள்ளன. மீதமுள்ள இரண்டு பாலங்களில் கட்டுமான பணி தொய்வாக இருந்ததால், உயரதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை வழங்கியிருக்கின்றனர். இவ்வேலைகள் முடிந்ததும், சிங்காநல்லுார் மற்றும் கணபதியில் பாலம் கட்டும் பணி துவக்கப்படும்’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.