கோவையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாநகராட்சியின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தொடர் புகார்கள் வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவைகளுக்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து அதனை +918147684653 என்ற மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை சுமார் 4100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாநகராட்சியில் சாலை சீரமைக்க ஏற்கனவே ரூ.200 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்ட புகார்கள் மற்றும் மண்டல வாரிய பெறப்பட்ட விவரங்களை கருத்தில் கொண்டு சுமார் 500 இடங்களில் சாலை பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளன” என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.