மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி கிராமத்தில், வெள்ளி மலைக்குச் செல்லும் சாலையில் குன்றக்குடி ஆதீனத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக கிராம மக்கள் நேற்று காலை கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறையினர் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். உடலில் காயங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. திருமணமானவராக தெரிகிறது. அவரை மர்ம நபர்கள், தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்தப் பெண் யார் என்பதைக் கண்டுபிடிக்காமலிருக்க அவரது உடல் மீது பனை ஓலைகளைப் போட்டு தீ வைத்துள்ளனர். இளம்பெண் உடலின் அருகே வீட்டு சாவி, சிறிய கத்தி மற்றும் உடைந்த பாட்டில்கள் கிடந்தன.
உடனடியாக அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் பொன்னி நிகழ்விடத்திலிருந்து அருகே இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்று நின்றது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அந்தப் பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, பின்னா் எரிக்கப்பட்டுள்ளாா் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– மதுரை வெண்புலி.