சிங்கம்புணரி இந்தியன் வங்கியில் விவசாய செலவிற்காக தனது மனைவியின் நகையை அடகுவைத்து எடுத்துவந்த விவசாயியின் மூன்று லட்ச ரூபாய் பணம், திட்டமிட்டு கொள்ளையடித்துள்ள சம்பவம் சிங்கம்புணரி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் காரைக்குடி சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் விவசாய செலவிற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், இந்த வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி, தனது மனைவியின் 108 கிராம் தங்க நகையை அடகு வைப்பதற்காக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் மூன்று லட்ச ரூபாய் பணத்திற்காக 94.5 கிராம் நகையை அடகு வைத்து விட்டு மீதி 12.5 கிராம் நகையை பெற்றுக்கொண்டு விவசாய கடனாக பெற்ற ரூபாய் 3 லட்சத்துடன் தனது பணம் ₹.14,000த்தையும் சேர்த்து 3 லட்சத்து 14 ஆயிரம் பணத்தையும் மீதமுள்ள 12.5 கிராம் தங்க நகையையும் ஒரு பையில் வைத்துக் கொண்டு வங்கியை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்தப் பையை வங்கியின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு வண்டியை இயக்க முற்பட்டபோது இருசக்கர வாகனத்தின் முன் சக்கரம் பஞ்சராகி இருந்துள்ளது. உடனடியாக அருகிலிருந்த இரு சக்கர வாகன பழுது நீக்குமிடம் சென்று பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தியன் வங்கியிலிருந்து அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர் அவருடைய கவனத்தை திசைதிருப்பி வண்டியில் இருந்த பணப்பையை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
விவசாயி கிருஷ்ணமூர்த்தி தனது வாகனத்தை பழுது பார்த்த பின்பு வண்டியை இயக்க வாகனத்தின் சாவியைத் தேடிய போது சாவி தன்னிடம் இல்லாததை கண்டு அதிர்ந்துள்ளார். மாற்றுச் சாவி போட்டு வண்டியை திறந்து பார்க்கையில், அதில் தான் வங்கியிலிருந்து கொண்டு வந்திருந்த ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் பணம் மற்றும் 12.5 கிராம் நகை அடங்கிய பை திருடு போனது தெரியவந்தது.
உடனடியாக சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகாரளித்தார். சிங்கமுடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக குறிப்பாக இந்தியன் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வரும் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையர்கள், தொடர்ந்து கைவரிசை காட்டுவது சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.