சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 165 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கான நியாய விலை கடை, 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாய் கிராமமான அணைக்கரைக்பட்டியில் உள்ளது.
இரு கிராமங்களுக்கிடையே பேருந்து வசதியில்லாத நிலையில் நடந்தே சென்று பொருள்களை வாங்கி வரும் அவலம் பல வருடங்களாக இருந்து வருகிறது. தங்கள் பகுதிக்கு தனியாக ஒரு பகுதி நேர நியாய விலைக்கடை அமைத்துத் தருமாறு அந்த மக்கள் அரசுத்தரப்பிடம் பல்வேறு முறைகள் முறையிட்டு வந்த நிலையில், இன்று காலை சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். முற்றுகையின் போது புதிய நியாய விலைக்கடை அமைத்துத் தராவிட்டால், தங்களது குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறினர்.
அவர்களிடையே பேசிய சிங்கம்புணரி வட்ட வழங்கல் அதிகாரி நேரு, ‘அணைக்கரைப்பட்டி பாரதிநகரில் பகுதிநேர நியாய விலை கடை அமைக்கும் கோரிக்கை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிந்துரையின் பேரில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரின் பரிசீலனையில் இருப்பதாகவும், ஓரிரு வாரங்களில் பாரதிநகரில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை அமைய உள்ளதாகவும்’ கூறினார்.
இதன்மூலம் சமாதானம் அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் கயல்செல்வியிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திக்காக,
– பாரூக், சிவகங்கை.