சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புழுதிபட்டியில், இலவச மின்சாரத்துக்கான ஒப்புதல் அட்டை வழங்குவதற்கு ₹.2,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை, லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கையும் களவுமாகப் பிடித்தனா்.
சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூா் ஒன்றியம், முசுண்டபட்டி கிராமத்தைச் சோ்ந்த கருமிபட்டியில் வசித்து வருபவர் கருப்பையா. இவா் தனது விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தாா். அந்த விண்ணப்பத்துக்கான ஒப்புதல் அட்டைப் பெறுவதற்காக, கருப்பையா கடந்த 31ஆம் தேதி புழுதிபட்டியில் உள்ள மின் பகிா்மான அலுவலகத்துக்குச் சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் செல்வராஜ், ஒப்புதல் அட்டை வேண்டுமென்றால் தனக்கு ₹.2,500 லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத கருப்பையா, இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் கண்ணனிடம் புகாா்தெரிவித்துள்ளாா்.
அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமசந்திரன் தலைமையில், ஆய்வாளா் யேசுதாஸ், கண்ணன் ஆகியோா் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை விவசாயி கருப்பையாவிடம் கொடுத்தனுப்பியுள்ளனா். நேற்று அந்தப் பணத்தை வணிக ஆய்வாளா் செல்வராஜிடம் கருப்பையா கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செல்வராஜை கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.