‘ஒருமித்த கருத்துடனும், ஒற்றுமை உணர்வுடனும் அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் வாழ வேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றும் நோக்கில் சமத்துவபுரம் திட்டத்தை 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, கோட்டை வேங்கைப்பட்டியில் 2011ஆம் ஆண்டு ஒரு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ₹.3.17 கோடி செலவில் 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை, பூங்கா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவை என சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சகல வசதியுடன் கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளநிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளைத் திறக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை எடுத்தார்.
சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கோட்டை வேங்கைப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) திறந்துவைத்து வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக சமத்துவபுரத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
– பாரூக், ராயல் ஹமீது.