சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த வீடுகளை அகற்ற சமீபத்தில் வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களையும் ஆக்கிரமிப்பு எனக் கூறி அதிகாரிகள் அகற்ற முயற்சிப்பதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளை அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி மாதம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை மட்டும் அதிகாரிகள் அளவீடு செய்து அகற்றினர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்படி நோட்டீஸ் வழங்க நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணி துறை அதிகாரிகள் வந்தனர்.
அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி, பொதுப்பணி துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெறவில்லை. தங்களுக்கு மாற்று இடம் தேவையில்லை. இங்கு தாங்கள் தொடர்ந்து வசிக்க அனுமதிக்குவரை தொடர்ந்து போராடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் பணிகளை நிறுத்திவிட்டு கிளம்பி சென்றதால் பரபரப்பு நிலவியது.
-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.