நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் உள்ள பிளஸ்-1 வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்காக தலைமை ஆசிரியர் சென்றுள்ளார். அப்போது அந்த வகுப்பறையில் ஒரு மாணவிக்கு கிறிஸ்டோபர் ஜெபக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளும் அனுப்பி உள்ளார். இதேபோல் வேறு சில மாணவிகளிடமும் அவர் ஆபாசமாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் திசையன்விளை போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கிறிஸ்டோபர் ஜெபக்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தலைமறைவான கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்ட தனிப்படைகள் தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சரவணனின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் ஒரு தனிப்படையும் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை தேடி வருகிறது.
அவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து பார்த்ததின் அடிப்படையிலும், உறவினர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அவர் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தனிப்படையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் ஒரு தனிப்படை கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளது. அதேசமயம் மற்றொரு ஞதனிப்படையினர் குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியிலும் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை தேடி வருகின்றனர். மேலும் அவர் வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்தியாளர்
-அன்சாரி நெல்லை.
.