கோவை உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் வடிவமைப்பால், துாய்மை பணியாளர்கள் வீடுகளை இடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அவர்களுக்கு மாற்று வீடு கட்டுவதற்கு, மீன் மார்க்கெட்டை இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால், சிக்கல்உருவாகியுள்ளது. உக்கடத்தில் கட்டப்படும் மேம்பாலத்தில், ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், பேரூர் பைபாஸில் இறங்கும் வகையில், வளைவாக ஓடுதளம் அமைக்கப்படுகிறது.
இதற்காக, சி.எம்.சி., காலனியில் வசிப்போரின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு அதே இடத்தில் மீண்டும் மாற்று வீடு கட்டித்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தரைத்தளம் மற்றும் ஐந்து மாடிகளுடன் மூன்று பிளாக்குகளில், வீடு கட்டும் பணி தற்போது நடந்துவருகிறது. இரண்டு பிளாக்குகள் கட்டுவதற்கு, மீன் மார்க்கெட்டை இடித்து இடம் ஒதுக்கித் தருமாறு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில் இறைச்சி வியாபாரிகளில் ஒருவர், ‘சில்லறை மீன் மார்க்கெட் கட்டி, 12 ஆண்டுகளே ஆகின்றன. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் இவ்வளாகத்தை இடிக்கக் கூடாது. துாய்மை பணியாளர் குடியிருப்பை மாற்று இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், ‘மீன் மார்க்கெட் கட்டுவதற்கு செலவழித்த தொகை; இடிக்க வேண்டிய அவசியம் ஏன். துாய்மை பணியாளர்களுக்கு வேறிடத்தில் குடியிருப்பு கட்டிக் கொடுக்கலாமே’ என்பன உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணை, வரும், 27ல் நடக்கிறது. மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு இடம் தேவை என்பதால், இவ்வழக்கில், தங்களது தரப்பு கருத்தை தெரிவிக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை கட்டும் பாலத்தை, பேரூர் பைபாஸில் திருப்பாமல் ஒப்பணக்கார வீதியில் இறங்கும் வகையில், நேராக இறங்கு தளம் அமையும் வகையில் வடிவமைத்திருந்தால், ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள் வீடுகளை இடிக்க வேண்டிய நெருக்கடி; புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு கோடிக்கணக்கில் நிதி செலவினம் செய்வது; ரூ.1.37 கோடியில் செலவழித்து கட்டிய மீன் மார்க்கெட்டை இடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நெடுஞ்சாலைத்துறையினர் செய்த பாலம் வடிவமைப்பால், இக்கட்டான சூழல் ஏற்பட்டு, ஐகோர்ட்டில் படியேறும் சூழ்நிலை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அடுத்தகட்ட விசாரணையில் என்ன நடக்குமோ என, மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பீதியில் இருக்கின்றனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.