ஈஷா யோகா அறக்கட்டளை கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளது. இங்கு கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்கள் காலம்காலமாக யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்தில் அமைந்துள்ளன.
ஈஷா யோகா அறக்கட்டளையின் அனைத்து கட்டுமானங்களும் சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. அரசு ஆணைகளையும், பல்வேறு துறைகளின் தடையில்லா சான்றுகளை பெறாமலும், விதிமுறைகளை மீறியும் உள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகின. மேலும் விதி 4 (3) பொது வழிப்பாடு அல்லது மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும். ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளிடம் முன் அனுமதி பெறாமல் 42.77 ஏக்கர் நிலப்பரப்பில் முதலில் 63380 ச.மீ. பரப்பளவில் கட்டிடங்கள் எழுப்பியுள்ளனர்.
மேலும் 1994 முதல் 2010 ஆண்டு வரை பல்வேறு கட்டிடங்கள், குளம், தீர்த்த குண்டங்கள், தியான மண்டபங்கள், நடைபாதை, அலங்காரத் தோட்டம், விளையாட்டு மைதானம், வாகன நிறுத்துமிடம் என 4,27,700.00 ச.மீ. பரப்பளவில் மேற்சொன்ன வகையில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பியுள்ளனர்.
ஆனால், 300 சதுர மீட்டருக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ், பிபிசிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நேர்காணல் அளித்தார். நேர்காணலின் போது ஈஷா யோக மைய கட்டுமானங்களுக்கு அனுமதி கோரிய ஈஷா யோக மைய கடிதத்தைச் சுட்டிக்காட்டி
“சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் விதிகளை மீறிவிட்டோம்” என்று குறிப்பிட்டு, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், ‘நான்சென்ஸ், இந்த கேமராவை ஆப் பண்ணு, உஷ்…’ என்று சொல்லி முறைத்தார்.
(இந்தத் தருணத்தில், பிபிசியின் கேமராவை ஆஃப் செய்யுமாறு ஜக்கி வாசுதேவ் தனது தன்னார்வலர்களிடம் அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.)
தொடர்ந்து கேள்வி எழுப்பிய பத்திகையாளருக்குப் பதில் அளிக்காமல் வலுக்கட்டாயமாக அனைத்துக் கேமராக்களையும் நிறுத்தச் சொன்னார்.
துறவறத்தை மேற்கொண்ட ஒருவர் பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்டு, அவரை அதட்டி மிரட்டியதால் சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.