கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக பள்ளிகள் செயல்படாமல், ‘ஆன்லைன்’ வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால், பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில், மாணவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தயாராகவில்லை.
விரும்பத்தகாத சம்பவங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின. புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களை வரவேற்க, ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். பள்ளிக்கு வரும் போது, மாணவர்களை மகிழ்வுடன் அழைத்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்குதல் என, மாணவர்களை வரவேற்க ஆலோசித்து, அதற்கேற்ப பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளே பாடங்கள் நடத்தாமல், புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை முறையாக பின்பற்றவும்; பள்ளிக்கு மாணவர்கள், ‘ஆப்சென்ட்’ ஆகாமல் வர உதவியாக இருக்கும் வகையில் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வகுப்புகள் நடத்த வேண்டும், என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வுக்கு முன்னர், 15 முதல் 18 வயது வரை பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 12 வயது முதல் 14 வரையுள்ள பிரிவில் இடையில் தேர்வு வந்ததால், தடுப்பூசி பலர் செலுத்தவில்லை. இதற்கான பட்டியல் தயார் செய்து மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிசெய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் கேட்கும் வரை தாமதிக்காமல், பஸ் பாஸ் தேவைப்படும் மாணவர்களிடம் இன்று முதல் தகவல்களை பெற்று தொகுப்புகளை தயார்நிலையில் வைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் இடையூறு இன்றி பயணம் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சி.இ.ஓ., கீதா கூறுகையில், ”பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளன. உரிய வழிகாட்டுதல்கள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கியுள்ளோம். பாடபுத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளோம். முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால், ஒரு வார காலம் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இணைப்பு பயிற்சி மட்டுமே வழங்கப்படும். மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் துவக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதிசெய்ய கூறியுள்ளோம்,” என்றார்.
இதுகுறித்து, இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் லெனின் பாரதி கூறுகையில்,” பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைக்கின்றோம் என்ற பெயரில் மாணவர்களிடம் அதிக அழுத்தம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமா க கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் அமையவேண்டும். கடந்த வாரம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதனை சரியாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். கல்விக்கு இணையாக ஆரம்பம் முதலே விளையாட்டுகளுக்கும் இடம் அளிக்கவேண்டும்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.