கோவை -பொள்ளாச்சி ரோட்டில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தும் தனியார் பஸ்கள், விதிமீறலில் ஈடுபடுகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 70 ‘டெசிபல்’ அளவுக்கு ஒலி எழுப்பும் ஹாரன்களை மட்டுமே, வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். அதற்கு அதிகமான ‘டெசிபல்’ சத்தம், காது கேளாமை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள்.
சமீபத்தில், சிங்காநல்லுாரில் தெற்கு ஆர்.டி.ஓ., பாலமுருகன், காந்திபுரத்தில் மத்திய ஆர்.டி.ஓ., சத்தியகுமார் என, கோவை மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், பஸ்களில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த, 36 ‘ஏர் ஹாரன்’கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், கோவை-பொள்ளாச்சி ரோட்டில் இயங்கும் தனியார் டவுன், வெளியூர் பஸ்கள், ஏர் ஹாரன் பொருத்தி, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவதை காணமுடிகிறது. சிக்னல்களில் இதர வாகனங்களை விரட்டுவதற்கு, தொடர்ந்து ஏர்ஹாரன் அடிக்கும் இந்த பஸ்களை கண்டு, வாகன ஓட்டிகள் அலறியடித்து பறக்கின்றனர்.
போக்குவரத்து துறையினர் ஏதோ ஒரு நாள் மட்டும் ஆய்வு செய்தால் போதாது. அடிக்கடி திடீர் சோதனை நடத்தி, பஸ் வழித்தட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.