நடிகர் விவேக்கின் நினைவாக, பச்சாபாளையத்தில் ‘சிறுதுளி’ அமைப்பின் சார்பில் உருவாக்கப்படும் ‘பீ ஹேப்பி’ வனத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது.மறைந்த பாடகர் எஸ்.பி.பி.,யின் நினைவாக, ‘சிறுதுளி’ அமைப்பின் சார்பில், கோவை, பச்சாபாளையத்தில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வனத்தை, நடிகர் விவேக் துவக்கி வைத்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மறைந்து விட்டதால், அவரின் நினைவாக, ‘பீ ஹேப்பி’ என்ற பெயரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க ‘சிறுதுளி’ அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில், ஒரு ஏக்கர் பரப்பில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறுதுளி அமைப்பின், 19ம் ஆண்டு விழாவையொட்டி, நடிகர் விவேக்கின் நினைவாக அமைக்கப்படவுள்ள இந்த வனத்திற்கு, பூமி பூஜை, பச்சாபாளையத்தில் நேற்று நடந்தது. விழாவில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதுகுறித்து சிறுதுளி அமைப்பினர் கூறுகையில், ‘நடிகர் விவேக், இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து, மக்களிடம் சூழல் ஆர்வத்தை விதைத்தவர். எங்களின் ‘சிறுதுளி’ அமைப்புடன் இணைந்து, பல்வேறு சூழல் பணிகளை கோவையில் செய்துள்ளார். அவரின் நினைவாகவும், எங்கள் அமைப்பின் 19 வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையிலும் ஒரு ஏக்கரில், ‘பீ ஹேப்பி வனம்’ என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இதைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.
நாளையவரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.