”பெட்ரோல் பங்க்குக்கு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்,” என்று போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். கோவை மாநகர பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தலைமை வகித்து பேசியதாவது: பைக்கில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர், விபத்தில் சிக்குவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் ஹெல்மெட் அணியாத, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நுாதன முறையில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் பங்க்குகளுக்கு, ஹெல்மெட் அணியாமல் வந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமரா காட்சி பதிவுகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கு பங்க் உரிமையாளர்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, துணை கமிஷனர் பேசினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.