கோவை – அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பால பணிக்காக, 43 மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, மறுநடவு செய்யப்படுகின்றன.கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. சிட்ரா சந்திப்பு பகுதியில், ‘செக்மென்ட்’ தொழில்நுட்பத்தில் ஓடுதளம் அமைக்கப்படுகிறது.
அரசு மருத்துவ கல்லுாரி முன், மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது.சிட்ரா அருகில் ஏறுதளம் அமைப்பதற்கு, துாண்கள் கட்டும் பணியும் துரிதகதியில் நடந்து வருகிறது. உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி வருவோர், சிட்ரா சந்திப்புக்கு முன் இறங்குவதற்கு இறங்கு தளம், மழை நீர் வடிகால் மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதை கட்ட வேண்டும்.
இதனால், அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.அவற்றில் அரச மரம், வேப்ப மரம், மந்தாரை, புங்கன், சீமை வாகை, கொன்றை, கற்பூர மரம், வங்காள ஆலமரம், மலை கருங்காலி என, 43 மரங்களை பெயர்த்தெடுத்து, சரவணம்பட்டி – தென்னம்பாளையம் ரோடு மற்றும் கைகோலம்பாளையம் ரோட்டிலும் மறுநடவு செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்றிருக்கின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வு செய்து, வெட்ட வேண்டிய மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்து, மறுநடவு செய்ய வாய்ப்பிருக்கிறதா என கணக்கெடுத்தனர். மரங்களை எடுத்து, போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே கொண்டு செல்வதற்கு பதிலாக, அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்துக்குள் மறுநடவு செய்ய இடம் ஒதுக்கித்தர, கல்லுாரி டீன் நிர்மலாவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ‘சிட்ரா’ பகுதியில் உள்ள மரங்களை பெயர்த்தெடுக்க, பக்க கிளைகள் வெட்டப்பட்டு, சாணம் பூசப்பட்டுள்ளது. விரைவில் இம்மரங்கள், மருத்துவ கல்லுாரி வளாகத்துக்குள் மாற்றப்பட இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.