கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால்,
வனத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணியரை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ஆழியாறில் வனத்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதை கடக்கும் சுற்றுலா பயணியரிடம், 30 ரூபாய் நுழைவுக்கட்டணம், பைக்குகளுக்கு 20, கார்களுக்கு 50, பஸ்களுக்கு 100, கேமராக்களுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கவியருவிக்கு செல்வோரிடம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஆழியாறு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள உள்ளூர் மக்களிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ஆழியாறு சோதனைச்சாவடியில், தனியார் சுற்றுலா மையம் போல் கட்டணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது. வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கும், பணி நிமிர்த்தமாக செல்ல வேண்டுமென்றாலும், நுழைவுக்கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டண வசூலை முறைப்படுத்தி, கோவை மாவட்ட மக்களை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும்.
கவியருவிக்கு செல்வதற்கும் அங்கு, வாகனங்கள் ‘பார்க்’ செய்வதற்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய கட்டண முறையை பின்பற்றுகின்றனர். இந்த கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.