மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் சிரமங்களின்றி செய்வதற்கு ஏதுவாக காவிரி டெல்டா படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் நீர் வழித்தடங்களில் சுமார் 4418 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1580 கிமீதூரத்தில் சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணையும் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 5.20 லட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும்சாகுபடி பரப்பு கூடுதலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி படுகை மாவட்டங்களில் தூர்வாரும் இடங்களைப் பார்வையிட்ட பிறகு திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் மனங்குளிரும் அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டில் குறுவையில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் மற்றும் சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுப்பயிர்கள் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. அதே சாதனைகள் இந்த ஆண்டும் தொடரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.61 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும், மேலும் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீட்டில் முழு மானியவிலையில் வழங்கப்படும்.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன்நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சத்திற்கு வழங்கப்படும், வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்பதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். நீர் வழித்தடங்களில் சிறப்பான திட்டமிடலுடன் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளாலும், மானிய விலையில் உரங்கள், விதைகள், விவசாய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலமாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி தலைமையிலான அரசு விவசாய பயிர்கள் உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப்பயணித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் அவர்களின் இத்தகைய தொலைநோக்கு திட்டங்களால் விவசாயமும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பலன் பெறுவதன் மூலம் தமிழகமும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கும் என்பதில் சந்தேகமில்லைஎன்று கூறியுள்ளார்.
-ருசி மைதீன்.தஞ்சாவூர்.