கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் இரத்தினம் ஆராய்ச்சி மையம் மற்றும் தரவு பகுப்பாய்வு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி கூடத்தை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். அக்கூடத்தினைப் பார்வையிட்டு ஆராய்ச்சி கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் மாதிரி செயல்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இரத்தினம் ஆராய்ச்சி மையம் ரத்தினம் கல்விக் குழுமத்தின் அனைத்து வகையான ஆராய்ச்சிகளுக்கும் செயல்பாட்டு மையமாக செயல்படுகிறது மற்றும் நிபுணர்கள் குழு ஒத்துழைத்து தரவு பகுப்பாய்வு மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பத் திட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல்தொடர்பு குறித்து கலந்துரையாடும் கூடமாகவும் செயல்படுகிறது. இக்கூடமானது மாணவர்களிடையே பிளாக்செயின் மற்றும் தரவுகள் குறித்த தொழில்நுட்ப அறிவினை ஊக்குவித்து இதுக்குறித்த புரிதலை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
நிகழ்ச்சியில் இரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில், இரத்தினம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மாணிக்கம் ராமசாமி, இரத்தினம் தொழில்நுட்ப கல்லூரியின் தலைமையாசிரியர் டாக்டர் நாகராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஐ. சி ரைஸில் உள்ள தொழில்முனைவோர்களையும் அவர்களின் ஸ்டார்ட்அப்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
-சீனி போத்தனூர்