அன்னதானம் சாப்பிட வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணையும், அவரது தாயையும் அவிநாசி கோவில் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் ரோடு, சிந்தாமணி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி தங்கமணி, 53. மகள் இந்திராணி, 38; பார்வையற்ற மாற்றுத்திறனாளி. நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்ற இருவரும், அன்னதானம் சாப்பிட வரிசையில் நின்றனர். தங்கமணிக்கு டோக்கன் கிடைத்தது; இந்திராணிக்கு கிடைக்கவில்லை. இவர்களுக்கு பின்வரிசையில் நின்றவர்களில் ‘டோக்கன்’ இல்லாமல் இருந்த சிலரை துப்புரவு ஊழியர் கலா அனுமதித்து, இந்திராணியை வெளியில் நிறுத்தி உள்ளார். இதைக்கேட்ட இந்திராணியை, கலாவும், பிற பெண் ஊழியர்களும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அங்குள்ள ‘சிசிடிவி’யை ஆய்வு செய்து ஊழியர்கள் தாக்கியதை செயல் அலுவலர் உறுதி செய்தார்.
பொதுமக்கள் முன்னிலையில், அதுவும் பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளியை, கோவில் பெண் ஊழியரே தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறுகையில், ”கோவில் ஊழியர்கள் இந்திராணியிடம் நடந்து கொண்ட முறை தவறுதான். போலீசில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம்; கோவில் தரப்பில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளோம்,” என்றார்.திருப்பூர் மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரையிடம் கேட்டபோது, ”இந்த விஷயம் எனது கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும், நாளை(இன்று) கோவிலுக்கு சென்று விசாரைண நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
பக்தர்கள் கூறுகையில்,’ கோவிலில் தினமும், 100 பேருக்கு அன்னதானம் வழங்க ‘டோக்கன்’ கொடுக்க வேண்டும். ஆனால், 70 பேருக்கு மட்டும் கொடுத்து விட்டு, மீதியை அவர்களுக்கு வேண்டியவர் களுக்கு வழங்குகின்றனர். இந்த பிரச்னை தொடர்கிறது இதனை ஆய்வுசெய்ய வேண்டிய கோவில் அதிகாரி எதனையும் கண்டு கொள்வதில்லை. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை,அதுவும் ஒரு பெண்ணே தாக்கியது கொடூரமானது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய டோக்கனை முழுமையாக கொடுக்காமல் அதில் சிலவற்றை எடுத்து வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பது பரவலாக நிறைய கோவில்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடுக்க அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளை வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.