திரவுபதி முர்மு, நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்கிறார். இதற்காக நாடாளுமன்றத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவில் உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்து கவுன்சிலராக வாழ்க்கையைத் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர் எனப் படிப்படியாக உயர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார். தேர்தலில் 64 சதவீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முர்மு, நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திங்கள்கிழமை காலை பதவியேற்கவுள்ள முர்மு, காலை 9.17 மணிக்கு நாடாளுமன்றத்தில் வடக்கு முற்றத்திற்கு வருகை தருவார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்பார். பின்னர் காவேரி அறைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுவர்.
காலை 9.42 மணி அளவில், காவேரி அறையில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத்தும் அப்பதவியை ஏற்கவிருக்கும் முர்முவும் தர்பார் ஹாலுக்கு செல்வர். சரியாக 9.49 மணி அளவில் சல்யூட் மரியாதையை குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் அளிக்க அதை ராம்நாத் கோவிந்த் ஏற்பார். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ராம்நாத் கோவிந்தும், திரவுபதி முர்முவும் அமர்வார்கள். காலை 9.50 மணிக்கு வடக்கு முற்றத்தில் இருந்து நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா செல்வார்.
10.03 மணி அளவில், குடியரசுத் தலைவர் கோவிந்தும், முர்முவும் பாரம்பரிய வாகன அணி வகுப்பில் நாடாளுமன்றத்தின் 5-வது நுழைவாயிலுக்கு வருவார்கள். அவர்களை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஆகியோர் வரவேற்பர்.
10.05 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுவர்.காலை 10.11 மணிக்கு குடியரசுத் தலைவராக முர்மு தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய தகவலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அனுமதியை கோரியபின் உள்துறை செயலாளர் அறிவிப்பார்.
சரியாக 10.14 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, திரவுபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உடனடியாக கோவிந்த் அமர்ந்துள்ள இருக்கையில் முர்மு அமர்வார்.10.18 மணிக்கு பதவியேற்பு பதிவேட்டில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கையெழுத்திடுவார்.பின்னர் 10.23 மணிக்கு நாட்டு மக்களுக்கு திரவுபதி முர்மு தனது முதல் உரையை ஆற்றுவார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று முப்படைகளின் மரியாதையை ஏற்று, ராம்நாத் கோவிந்தை வழியனுப்பு நிகழ்ச்சியை பார்வையிடுவார்.
முர்முவின் பதவியேற்பு நிகழ்ச்சயில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்பார்கள். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.