சென்னை: வங்க கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் அந்த நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நினைவூட்டும் வகையில் பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி நினைவிடம் அருகில் வங்க கடலுக்குள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் பேனா போன்ற நினைவுச்சின்னம் கடலுக்குள் புல்வெளிகள் நடுவில் அமைக்கப்பட இருக்கிறது.
கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி தந்துள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றும் வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை நிறுவ விட முடியாது.. அதெல்லாம் முடியாது.. நிறுவ நான் விடப்போவதும் இல்லை. அப்புறம் கண்ணாடி உள்ளே வைப்பீங்க.. இப்ப உதயநிதி முதலமைச்சராகிவிட்டால் எங்க அப்பா விக் வைத்திருந்தார் என கடலுக்குள் விக் வைப்பீங்களா? இது எல்லாம் தேவை இல்லாத சேட்டை. இது எல்லாம் யாரு காசு?
பேனா வைக்கிறேன்..நோட் வைக்கிறேன்னு.. ஏ.. நீ சமாதியில் வடை, காபி வைக்கிறதையே திட்டிகிட்டு இருக்கேன் நானு.. இதெல்லாம் கொழுப்புங்க.. இதெல்லாம் ஊடகங்கள்தான் பேசனும். ரூ39 கோடிக்கு சமாதி.. அந்த ரூ39 கோடியில் சமாதியை கட்டி முடிப்பாரா? அதற்கு கணக்கு காட்டுவாரா? அறிக்கை விடுவாரா? சரியா ரூ39 கோடியில் முடிச்சுட்டேன்னு சொல்வாரா? யார் காசு இது? எங்கப்பனுக்கு நான் சமாதி கட்டுறேன்.. நினைவிடம் கட்டுறேன்.. என் காசுல கட்டுறேன்.. அப்படி கட்டுங்க.. அரசு காசில் பேனா வைக்கிறேன்.. அவர் பென்சில் வைச்சிருந்தார்னு பென்சில் வைக்கிறேன்.. இதெல்லாம் சேட்டை தானே.. வைக்கட்டும்..அப்புறம் பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் தமது பிறந்த நாளை கொண்டாடுவாரா? அல்லது ஸ்டாலின் என பெயர் வைத்த நாளை கொண்டாடுவாரா? யாராவது சொல்லுங்க? தமிழ்நாடு என்று 1956 நவம்பர் 1-ல் பிரிக்கப்பட்டுவிட்டது. ஜூலை 18 என்பது தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள். அதை தமிழ்நாடு நாள் என கொண்டாட சொல்லுவது பைத்தியக்காரத்தனம். இது திராவிட மாடல். இது திராவிட மாடலில் வருது.. இவ்வாறு சீமான் கூறினார்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.