கருங்காலக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் காரணமாக கருங்காலக்குடியில் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் போதை பழக்கங்களிற்கு வெகு சுலபமாக அடிமையாகி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து கருங்காலக்குடி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளரிடம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் புகாரளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கருங்காலக்குடி கிராம நிர்வாக அலுவலர், அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் நோக்கிலும், இளம் சிறார்கள் இப்பழக்கத்திற்கு அடிமை ஆவதிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்திலும் போதை விழிப்புணர்வு முகாமை இன்று (29/07/2022) ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழிப்புணர்வு முகாம் கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமையேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா வரவேற்றார். இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சண்முகப் பெருமாள், கொட்டாம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் கண்ணன், தனியார் பள்ளியின் தாளாளரும், கல்வியாளருமான மேலூர் சதக்கத்துல்லா, கிராம நிர்வாக அலுவலர் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பங்குகொண்டு மாணவர்களுக்கு அறிவுரையும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனும் வேண்டுகோளை வணிகர்களுக்கும் வைத்தனர். இந்நிகழ்வில் கருங்காலக்குடி வணிகர் சங்கத்தின் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட வணிகர்களும், பொறியாளர் பக்ருதீன் அலிகமத், சிராஜ்தீன், பொறியாளர் சக்கரை முகமது உள்ளிட்டோரும், பொதுமக்களும், ஏராளமான மாணவர்களும் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகர் சங்கத்தின் செயலாளர் ரமேஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தியதோடு, இன்று முதல் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என் உறுதியளித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக
– மதுரை வெண்புலி.