கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த நிலையில், மாணவியின் தந்தை, மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுப்பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்க கோரி முறையிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில் திருப்தி என்றும், உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதால், மறு பிரேத பரிசோதனை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென மாணவியின் தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மறு பிரேத பரிசோதனை உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீது நம்பிக்கை இல்லையா என மனுதாரர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பியதுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு தடையில்லை என உத்தரவிட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-வேல்முருகன் சென்னை.